வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

January 05, 2012

தமிழ்த்தேசியவாதம் : வெற்று உணர்வும் கருத்தியல் தளமும்

தமிழ்த்தேசிய போராட்டத்திற்குச் சமாந்தரமாக உள்ளேயும் வெளியேயும் நீணடகாலமாகப் பயணித்த நிலாந்தனுடைய நேர்காணல் வல்லினம் இணைய இதழில் பிரசுரமாகியிருந்தது. நீண்டகாலமாக பிரச்சனைகளுக்கு அண்மையில் இருந்தவர் என்ற ரீதியிலும் பிரச்சனைகளை கோட்பாட்டு ரீதியில் அணுகக்கூடியவர் என்ற ரீதியிலும் நிலாந்தனுடைய நீண்ட மௌனத்திற்குப் பின்பான கருத்து வெளிப்பாட்டைத் தொடர்ந்து நீண்ட உரையாடலை ஆரம்பித்திருக்க வேண்டிய தருணம் தவறவிடப்பட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. நிலாந்தனுடைய கருத்துக்களுடைய தீவிர விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம், குறைந்தபட்சம் பயணிக்க வேண்டிய திசையையாவது அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். தமிழ் அடையாளம் சார்ந்த எதிர்புணர்வுகள் முற்றுமுழுதாக புலிகளுடைய அணுகுமுறையாக இலங்கை அரசாங்கத்தால் முத்திரை குத்தப்பட்டு, ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுவரும் தருணத்தில் இந்நேர்காணல் பிரசுரமாகியுள்ளது. அதேநேரம், கருத்தியல் தளத்தில் அதிகார நிழலுக்கு வெளியே முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழ் அடையாளம் சார்ந்த எதிர்ப்புணர்வுகள் - தமீழீழ விடுதலைப் புலிகள் யுத்தம் மூலம் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் - புலிகளது தொடர்ச்சியாக பொதுமைப்படுத்தப்பட்டு நிராகரிக்கப்பட்டு வரும் வேளையில், நிலாந்தனுடைய நேர்காணல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.

இலங்கை அரசு கட்டமைப்பின் 'அனுமதிப்பு' வெளிக்குள் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழ் அடையாளம் சார்ந்த எதிர்ப்புணர்வுகள் தொடர்பாக நிலாந்தன் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவை பெரும்பாலும் அரசு சீர்திருத்தவாதத்துடன் (state reformation) உடன் தொடர்புள்ளவை. இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஏராளமான அரச சார்பற்ற நிறுவனங்களும், கிறிஸ்தவ மிஷனரிகளும் அக்கறை கொண்டிருக்கும் வெளிகளில் பேசுவதற்கு வகை தொகையற்றோர் உள்ளார்கள். அதுமட்டுமன்றி, அவ்வெளிகளிலேயே தாராண்மைவாதப் பொருளாதார (Liberal economy) நலனுடன் தொடர்புள்ளவர்களும் செயற்பட்டு வருகின்றார்கள். ஏன் சில பாராளுமன்ற இடதுசாரிகள் - இடதுசாரிச் செயற்பாட்டாளர்கள் கூட அவ்வெளிகளில் இயங்கி வருவது வெளிப்படையானது. இங்கு கவனப்படுத்தப்பட வேண்டிய பகுதி 'அரசு சீர்திருத்தம்' (state reformation) என்ற எல்லையைத் தாண்டி - தமிழ் அடையாளம் சார்ந்து அல்லது தமிழ்த்தேசிய அரசியல் தொடர்பாக நிலாந்தன் கூற முற்படும் விடயமே. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் ஈடுபட்டதில் இருந்து 2009 இல் நிகழ்ந்த மனிதப் பேரவலம் வரை சாட்சியாக இருந்த நிலாந்தன் - இத்துணை அனுபவத்திற்குப் பின்னரும், தீவிர ஒடுக்குமுறைப் பிரதேசத்தில் வசித்தவாறு - 'அரசு சீர்திருத்தம்' (State Reformation) என்ற அரசியல் செயற்பாட்டு வெளியைத் தாண்டிச் சென்று தனது கருத்தை ஏன் முன்வைக்கின்றார் என்பதை தீவிர உரையாடலுக்கு உட்படுத்த வேண்டியது அவசியமானது. காலத்தின் தேவையும் கூட.

தேசியஇனம் (national community), தேசம் (nation), இறையாண்மை நோக்கிய அதன் அபிசாலைகள் (Its (nation's) earning towards sovereignty), ஏற்கனவேயான கட்டமைப்பில் இறையாண்மையின் போதாமையை உணரும் தருணம் (The moment of realizing the lack of sovereignty in the prevailing state formation or structure), இறையாண்மை நோக்கிய பயணம் (towards sovereignty), தேசிய அரசுருவாக்கம் (nation state formation) போன்ற விடயங்களை இணைத்து அடுத்த கட்டத்திற்குச் செல்லும் போதே இக்கட்டுரை பூரணமடையும் என்றாலும், கட்டுரையின் விரிவுக்கு அஞ்சி நிலாந்தனுடைய ஒரு விடயத்தை மாத்திரம் தொட்டுச் செல்லலாம். ( 'தமிழ் சிவில் சமூகத்தின் வேண்டுகோளும் அதன் அடிப்படைகளும்' என்ற கட்டுரையில் மேலும் பல விடயங்களைத் தொட்டுச் செல்ல முயற்சிக்கின்றேன். அதற்கான அடிப்படையாக இக்கட்டுரையை வளர்த்துச் செல்லலாம். )


தமிழ் தேசிய உணர்வு முன்னரை விட கூர்மையடைந்திருக்கிறது என்பதே கள யதார்த்தம். - நிலாந்தன்

தமிழ் அடையாளச் செயற்பாடுகள் 1983 - 2009

மொழியை மையமாகக் கொண்ட புறக்கணிப்புக்களும் அடக்குமுறைகளையும் அவற்றின் மீதான எதிர்ப்புணர்வுகளையும் வரைபடத்திற்குள் கொண்டு வருவோமாக இருந்தால், அவ்வரைபடம் பெருமளவு மாற்றங்களைக் கண்டிருக்கின்றது என்பதை கவனப்படுத்த வேண்டும். 1983 இல் பல்வேறுபட்ட இயக்கங்களும் தமிழ்த்தேசிய அரசியல் பிரதேசங்களை அல்லது அவர்களின் செயற்பாட்டு வெளிகளை வரையறை செய்ய முயற்சித்த போது, சில கருத்து மாறுபாடுகளுக்கு அப்பாலும் - மொழி ரீதியான ஒன்றிப்புடன் முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களையும் தமிழ்த்தேசிய வரையறைக்குள் உள்வாங்கிக் கொண்டதன் நியாயப்பாடுகளையும் யதார்த்தையும் பரிசீலனை செய்வதை விடவும் இன்றைய நிலையில் குறித்த சமூகங்கள் எவ்வகையான வரையறைக்குள் வரப்போகின்றார்கள் என்பதை மீள்பரிசீலனை செய்ய வேண்டியது மிக அவசியமானது. இடைபட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள், அரசியல் செயற்பாடுகள், கோட்பாட்டு உருவாக்கங்கள், அடையாள உறுதியாக்கங்கள் - சமூக அசைவியக்கம் காரணமாகவும் முஸ்லிம் மற்றும் மலைய சமூகங்கள் தனித்தேசிய இனம் என்ற திசையில் பயணிக்கத் தொடங்கி நீண்ட காலமாகிவிட்டது என்பதை நிச்சயமாக தமிழ்த்தேசிய அரசியற் செயற்பாட்டாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டியுள்ளது. இன்றைய திகதியில், தமிழ்த்தேசியம் என்ற குடுவையில் இட்டு சகல சமூகங்களையும் குலுக்க முடியாது. இன்றைய நிலையில் தமிழ்த்தேசியச் செயற்பாடுகள் மொழி ரீதியான வரையறுப்புக்களுடன் நகர வேண்டிய தேவையிருப்பினும் கூட குறித்த தேசிய இனங்களை தமிழ்த்தேசியத்திற்குச் சமாந்தரமான நேச இனங்களாகவே அணைத்துச் செல்ல முடியும். தமது பூரண இறையாண்மையுடன் கூடிய அரசுருவாக்கம் (state formation) என்ற புள்ளியை நோக்கி தமது அரசியல் செயற்பாடுகளை குறித்த இனங்கள் நகர்த்தாத போதிலும், தனித்துவமுடைய தேசிய இனங்கள் (nation) என்ற கட்டம்வரைக்குமான அவர்களது பயணத்தை மறுக்க முடியாது. ( இதற்கான வலுவான காரணிகளை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பதிவு செய்ய முடியும். )

2009 இற்குப் பின்னரான தமிழ்த்தேசியம்

2009 மே இற்குப் பின்னர் தமிழ்த்தேசியத்தின் நிலை எத்தகையது என்பதை கோட்பாட்டு ரீதியில் வரையறை செய்ய வேண்டியது அவசியமானது. அரசு சீர்திருத்தம் (state reformation) என்ற வரையறையுடன் இயங்க முயற்சிப்பவர்களே, கவனம் கொள்ள வேண்டிய பகுதி என்ற நிலையில், அவ்வெல்லையைத் தாண்டி இயங்க முயற்சிப்பவர்கள் நிச்சயமாக கவனத்திற்கு உட்படுத்த வேண்டிய பகுதி இதுவாகும். நிலாந்தன் கூறுவது போன்று தமிழ் தேசிய உணர்வு முன்னரை விடக் கூர்மையடைந்திருப்பதே உண்மை. அதாவது, உணர்வுத்தளத்தில் - பிரக்ஞாபூர்வமாக தமிழ்த்தேசியம் முன்னரைவிடக் கூர்மையடைந்துள்ளது என்று மாத்திரமே கூற முடியும். தமிழ்ப்பிரதேசங்களில் உள்ள இராணுவப்பிரசன்னமும், அடையாள - நினைவு அழிப்புச் செயற்பாடுகளும், சுமுக நிலை தோற்றுவிக்கப்படாத நிலமையும், பாதுகாப்பற்ற உணர்வும், தமிழ் இனவழிப்பு மனவடுவுமாகச் சேர்ந்து தமிழ்த்தேசிய உணர்வை மேலும் கூர்மையாக்கியுள்ளதை யாரும் மறுக்க முடியாது. சிங்கள மையவாத அரசின் பன்மைத்துவ மறுப்புச் செயற்பாடுகளும் ஜனநாயக மறுப்பும் - அதனை நடைமுறைப்படுத்திவரும் அரச இயந்திரமும் சிறுபான்மை மக்கள் மனங்களில் தோற்றுவித்துள்ள அச்ச நிலமை தமிழ்த்தேசியத்தை மேன்மேலும் கூர்மைப்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்திற்கிடமில்லை. இக்காரணிகள், இந்நிலப்பரப்புக்களைத் தாண்டிப் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ்நாட்டிலும் தமிழ்த்தேசிய உணர்வைத் தொற்றவைத்துள்ளது. ஒருவகையில், இன்றுள்ள தமிழ்த்தேசிய உணர்வான் 'பெரும்பகுதி' சிங்களத் தேசியவாத நடைமுறையின் எதிர்வெளிப்பாடே தவிர, தமிழ் மக்களது நடைமுறை வாழ்வியலின் வாழ்க்கைமுறையுடன் (praxis) உடன் தொடர்புடையதல்ல என்பதை கவனப்படுத்த வேண்டியுள்ளது. கருத்தியல்களின் அசைவியக்கம் என்பது, குறித்த கருத்தியல்களின் தேவையை வலியுறுத்தும் மக்கள் சமூகத்தின் வாழ்க்கைமுறையுடன் (praxis) இணைத்துப் பார்க்கப்பட வேண்டியது அவசியமானது. உணர்வுத்தளத்திலான கருத்தியல்களும் - கருத்தொருமிப்புக்களும், உணர்வுத்தளத்தில் மாத்திரம் இயங்க முயற்சிக்கும் போது அவை நிச்சயமாக வெளியொதுக்கல்களை மேற்கொள்ளத் தொடங்கும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வெளியொதுக்கல்கள், குறித்த கருத்தியல்களின் 'உள்ளடக்கத்தை' (contents) பன்மைத்துவத்திற்கு (diversity) எதிராகவும் ஜனநாயக மறுப்பிற்குச் சார்பாகவுமான புள்ளியை நோக்கிக் கொண்டு செல்லும்.

நிலாந்தன் தனது நேர்காணலில் இன்றைய தமிழ்த்தேசியவாதத்தினை இருகூறாக்கி அணுக முற்படுகின்றார். முதலாவதாக தமிழ்த்தேசியத்தின் இன்றைய நிலையை சரியாக அடையாளம் காண்கின்றார். உணர்வுத்தளத்தில் - நில வரையறைகளைத் தாண்டிய அதன் வியாபகத்தைக் கூறியிருக்கின்றார். அதன் மறுக்கவியலாத யதார்த்தத்தையும் தெளிவுபடுத்தியுள்ளார். இரண்டாவதாக இன்றைய தமிழ்த்தேசிய உணர்வு நிலையின் பிரயோக வடிவம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் ஓரளவிற்குத் தொட்டுச் சென்றிருக்கின்றார். இரண்டாவது பகுதியை இன்னும் விரிவாக அவர் முன்வைத்திருக்கலாம். மிக முக்கியமாக தேசியவாதத்தின் பிரயோக வடிவத்தை வெறுமனே பொதுமைப்படுத்தி அணுகிவிட முடியாது.

இவ்விடயத்தை இரண்டாக வகுத்து அணுகும் போது நிச்சயமாக தமிழ்த்தேசியத்தின் பிரயோக வடிவம் தொடர்பான சரியான புள்ளிகளுக்கு வந்தடைய முடியும்.
* இறையாண்மை அடைவுடன் கூடிய - இன்றைய அரசு வடிவத்தில் உள்ள தேசியவாதத்தின் பிரயோக வடிவம்
* இறையாண்மைக்கான நகர்வுடன் கூடிய காலபகுதியில் தேசியவாதத்தின் பிரயோக வடிவம்

ஏற்கனவே கூறியபடி, இறையாண்மையுடன் தொடர்புடைய விடயங்களை பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம். ஆயினும், தேசியவாத்தின் பிரயோக வடிவத்தின் எல்லைகள் தொடர்பான புரிதலுக்கு நிச்சயமாக இறையாண்மை தொடர்பான ஓரளவிற்கான புரிதல் தேவைப்படுகின்றது. இங்கே, அழுத்தம் கொடுக்க விரும்பும் தேசியவாதத்தின் 'praxis' என்பதுவும் நிலாந்தனுடைய கருதுகோளிற்குச் சமாந்தரமாகப் பயணிப்பதே. அரசியல் கோட்பாட்டுத் தளத்தில் அது 'பிரயோக வடிவம்' என்ற சொல்லுடன் பொருந்தி வந்தாலும் - அத்தளத்திற்கு வெளியே முக்கியமாகப் பண்பாட்டு தளத்தில் 'praxis' என்ற சொல்லே அதிகம் பொருந்திவரும் போல் தோன்றுகின்றது. ( அரசியல் செயற்பாட்டுத்தளத்தில் தமிழ் சாணக்கியன் குறிப்பிடும் தகமை விருத்தி (capacity building) என்ற சொல்லும் இதற்குச் சமாந்தரமானதாகவே கருதுகின்றேன். )

[ இன்றைய தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் வல்லமையானது புலம்பெயர் தேசத்தவர்களிடமும் தமிழ்நாட்டு ஈழ விடுதலை ஆதரவாளர்களிடமும் தான் காணப்படுகின்றது என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. இக்கருத்து மிகத்தவறானது. தவறானது மாத்திரமல்லாது, ஈழத்தில் தமிழ்த்தேசிய அரசியலை சரியான திசைவழி நகர்த்துவதற்கு உதவப்போவதில்லை என்பது மாத்திமல்லாது, தடையாகவும் இருக்கும். குறிப்பிட்ட நிலப்பரப்புடன் தொடர்புள்ள - அந்நிலப்பரப்பைத் தமது வாழ்நிலை ஆதாரமாகக் கொண்டுள்ளவர்களது செயல்வடிவத்தைப் பலப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பது மாத்திரமே, நிலப்பரப்புடன் தொடர்பில் இல்லாதவர்களது பாத்திரமாக அமைய முடியும். அல்லது, பதட்டமான காலக்கட்டப்பகுதியில், குறித்த சமூக மக்கள் முன்னெடுக்கப்போகும் போராட்டங்களுக்கான ஆதாரங்களைப் பலப்படுத்துவதிலும் - உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கிலான செயற்பாடுகளையும் மாத்திரமே முன்னெடுக்கலாம். கட்டுரையின் இறுதிப்பகுதி, மேற்கூறியவற்றுக்கான காரணங்களைத் தெளிவுபடுத்தும். ]

இறையாண்மை அடைவுடன் கூடிய - இன்றைய அரசு வடிவத்தில் உள்ள தேசியவாதத்தின் பிரயோக வடிவம்

1983 இல் இருந்ததைப் போன்றல்லாமல் தேசிய அரசியல் செயற்பாடுகளின் நிகழ்த்துகை வெகுவாக மாறிவிட்டிருக்கின்றது. இரண்டால் உலகப்போரிற்குப் பிறபட்ட காலப்பகுதியில் இருந்து சோவியத் யூனியன் உடைவு வரையான காலப்பகுதி தேசிய அரசுருவாக்கச் செய்ற்பாடுகளுக்குச் சாதகமான காலப்பகுதியாயிருந்தன. மேற்கு மைய உலகம் 1990 களில் கண்களை மூடிக் கொண்டது. அக்காலப்பகுதியில் உருவாக்கப்பட்டிருந்த தேசிய அரசுகளும் - மக்கள்நல அரசு (welfare state) என்ற அவற்றின் நகர்வும், ஏற்கனவேயான அரசு கட்டமைப்பை நெறிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி அளிக்கப்பட்டது. அதாவது அரசு சீர்திருத்தவாதம் (state reformation) என்ற புள்ளியிலேயே கருத்தியலும் செயற்பாடும் குவிந்து காணப்பட்டது. ஒருவிதத்தில் உலகளாவிய பொருளாதாரம் (global economy) இற்கான தயார்ப்படுத்தல்களுக்கு அரசு சீர்திருத்தவாதம் (state reformation) தேவைப்பட்டது. அதாவது 1990 களின் முன்னரான உலக அதிகாரக் கட்டமைப்பு ஒழுங்கு குலைக்கப்பட்டதன் பின்னர், அமெரிக்கா தலைமையிலான - உறுதிநிலை தேவைப்பட்டது. நீண்டகால நோக்கில் அமெரிக்க வல்லாதிக்கக் கனவை குலைக்கலாம் - அதாவது அரசு என்ற அலகை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் உலக அதிகாரக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதன் அடிப்படையில் அரசுருவாக்கம் (state formation) செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டன. தேசிய இனங்களை மையப்படுத்திய அரசுக்குடுவைகள் ஜனநாயக திரவத்தால் ஊற்றி நிரப்பப்பட்டன. தனித்த அடையாளங்களது வலியுறுத்தல்களும் - அடையாள அரசியலின் எழுச்சியும் நிகழ்ந்தது. ஒவ்வொரு சிறிய அடையாளங்களும் விசேட கவனத்திற்குட்படுத்தப்பட்டு - அரசியல்மயப்படுத்தப்பட்டு பிரச்சனைகள் இனங்காணப்பட்டன. இவை பெரும்பாலும் சட்ட அங்கீகாரத்திற்கு உட்பட்ட செயற்பாடுகளாகவே காணப்படும். ஒருவிதத்தில் உலகளாவிய பொருளாதாரம் (global economy) இற்கு இந்நிகழ்வு மிகவும் தேவையாகவும் இருந்தது.

இறையாண்மைக்கான நகர்வுடன் கூடிய காலபகுதியில் தேசியவாதத்தின் பிரயோக வடிவம்

பின் காலனித்துவ காலப்பகுதி, காலனிக்குட்பட்ட நாடுகளுக்கு பெரும் பிரச்சனையாக அமைந்தது. உலக அதிகாரக் கட்டமைப்பின் அடிப்படை அலகான 'அரசு' (state) வடிவம் அவர்களுக்கு சிறையாகவே அமைந்தது. ஏனெனில், அவர்கள் மீது சுமத்தப்பட்ட அரசு என்ற வடிவம் இயல்பான வளர்ச்சியின் (organic evolution) பாலானது அல்ல. துரதிஸ்டவசமாக காலனித்துவ நாடுகளது சுரண்டல் பொறிமுறையின் மேலாண்மை அலகே, அவர்களது அரசாக அமைந்தது. ( வரலாற்றில் 'ஒன்றுபட்ட இலங்கை' என்பது கிழக்கிந்தியக் கம்பனியின் மேலாண்மை அலகு - Historically "United Sri Lanka" was an administrative unit created by British East India Company) திணிக்கப்பட்ட அரசு கட்டமைப்பிற்கு எதிராகவே பின் - காலனித்துவ போராட்டங்கள் நடைபெற்றன. வரலாற்று இயங்கியலில் தமிழ்த்தேசிய அரசியலின் புள்ளி இதுதான். இவ்வகைக்குள் வரக்கூடிய தேசியவாதத்தின் பிரயோக வடிவம் முற்றுமுழுதாக ஜனநாயக உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ராஜன்குறையின் மொழியில் சொல்வதானால் 'இன்னம் அடையமுடியாத இறையாண்மை, பல சமயங்களில் ஏற்படுத்தமுடியாத கருத்தொருமிப்பு உருவாக்கும் பதட்டத்தின், மன விகாரத்தின் விளைவு'. அதற்காக, இவ்வுள்ளடக்கம் ஜனநாயகமற்று இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக ஆகிவிடாது. மாறாக, ஜனநாயக உள்ளடக்கத்தை (democratic core ) அதிகப்படுத்தும் மனவிருப்புக் கொண்டதாக இருக்க வேண்டும். இவ்வகைமாதிரிக்குள் வரும் செயற்பாடுகள் உலகத்தில் எங்கும் ஏற்றுக்கொள்ளப்படாத சட்ட எல்லைகளைத் (legal boundary) தாண்டியவை.

தமிழ்த்தேசியவாதம் : பிரயோக வடிவமும் (applicable form) வாழ்வியல் நடைமுறையும் (praxis) தகமை விருத்தியும் (capacity building)

இறுதியாக இன்றைய தமிழ்த்தேசியவாதம்
(அ) நடைமுறையில் பண்பாட்டுத்தளத்திலும்
(ஆ) அரசியல் கோட்பாட்டுத் தளத்தில் அதன் பிரயோக வடிவத்தில்
(இ) அரசியல் செயற்பாட்டில் தகமை விருத்தியில்
எவ்வாறிருக்கின்றது என்று பார்த்தோமேயானால் துயரமான முடிவிற்கு வந்தடைய வேண்டியிருக்கும். பண்பாட்டுத்தளத்திலோ அனைத்துப் பிற்போக்குக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டு - தனது முற்போக்கான அடையாளங்கள் அனைத்தையும் இழந்து அம்மணமாக நிற்கின்றது. அரசியல் தளத்தில் - தமிழ்த்தேசியவாதத்தின் பிரயோக வடிவம், அதன் ஆழமான அர்த்தங்கள் அனைத்தையும் இழந்து வெறுமனே இலங்கை 'அரசு கட்டமைப்பை எதிர்த்தல்' என்றளவில் சுருங்கிப் போயுள்ளது.
தகமை விருத்தியில் பேச்சுவார்த்தை அரசிலயலை விட்டால் வேறு வழியில்லை என்ற மோசமான நிலையை எய்துவிட்டுள்ளது.

முக்கியமாக நிலாந்தனுடைய நேர்காணலில் தொடப்பட்டுள்ள இவ்விடயத்தை உரையாடல்கள் மூலமாகத் தொடர்ந்து வளர்த்துச் செல்ல வேண்டியுள்ளது. இவ்வடிப்படையைக் கொண்டு 'தமிழ் சிவில் சமூகத்தினுடைய வேண்டுகோள்களையும் - அதன் தொடர்ச்சியில் இடம்பெற்றுவரும் உரையாடல்களையும் கவனத்தில் கொண்டு - முக்கியமாக தமிழ் சாணக்கியனாலும் நிர்மானுசனாலும் பொங்குதமிழ் தளத்தில் எழுதப்பட்டுள்ள பிரதிகளை வாசிப்பிற்கு உட்படுத்தியபடி தொடர்ந்து செல்ல வேண்டும். தமிழ்த்தேசியவாதம் தொடர்பான உரையாடல்களின் போது ஒவ்வொரு தரப்பினரும் தனக்கு நெருக்கமான துறைகளுடன் மாத்திரம் உரையாடுவதன் காரணமாக பெருமளவிற்குப் போதாமைகளை உணரக்கூடியதாக உள்ளது. நிலாந்தன் முதன்மைப்படுத்தியுள்ள அரசியல் கோட்பாட்டுத்தளத்திலும் தமிழ் சாணக்கியனும் நிர்மானுசனும் பேசிக் கொண்டிருக்கும் அரசியல் செயற்பாட்டுத்தளத்திலும் ஏற்கனவே கடந்த காலங்களில் பெருமளவான உரையாடல்கள் முன்னெடுக்கபப்ட்டுள்ளன. ஆயினும், அதன் இருப்பைத் தக்க வைக்கக்கூடிய சக்தியுள்ள பண்பாட்டுத்தளத்திலும் வாழ்வியல் நடைமுறையிலும் இவ்விடயம் இணைத்துப் பேசப்படவில்லை. ஒரு கருத்தியலின் - அதன் முன்னெடுப்பின் ஆதாரமாக அமைவது பண்பாட்டுத்தளத்திலும் நடைமுறை வாழ்வியலிலும் அக்கருத்தியல் எவ்வளவுதூரம் வேர்விட்டுள்ளது என்பதிலேயே தங்கியுள்ளது. அரசியல் தளத்திலும் கோட்பாட்டுத்தளத்திலும் மாத்திரமேயான உரையாடல்கள் வெகுஜன உளவியலில் பெரியளவான மாற்றங்களை ஏற்படுத்த வல்லவையல்ல. தேசியவாத அரசியல் செயற்பாட்டில் மேற்கூறிய விடயங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பிறிதொரு பகுதியில் பார்க்கலாம்.

* வல்லினம் நேர்காணல்

* praxis (வினையான தொகை)

* தமிழ் சாணக்கியன் - பொங்குதமிழ்

No comments:

Post a Comment

Statcounter